இஸ்லாம் ஓர் மதமா, ஆன்மிக நெறியா, சித்தாந்தமா எனும் கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதற்கான பதில்... இஸ்லாம் ஓர் மதம். ஆம், அதில் மறைவனற்றின் மீதான நம்பிக்கைகளும், இறைவழிபாடுகளும், சடங்குகளும் உள்ளன. அந்த நம்பிக்கைகளும் வழிபாடுகளும் நமது பயணத்தை இவ்வுலக வாழ்வோடு சுருக்கிவிடாமல் மறு உலகம்வரை நீட்டி முடிவில்லா பெருவாழ்வின் உண்மையை உணர்த்தும். இஸ்லாம் ஓர் ஆன்மிக நெறி. அதில் மனதின் உள்ளொளியை தூண்டி அகக் கண்ணை திறக்கும். பார்வையைத் துலக்கமாகும். இறைவனின் படைப்பான பிரபஞ்சத்தோடு நம்மை ஒன்றிணைக்கும். நவீன கால அல்லகளிலிருந்து விடுதலை அளித்து ஆன்மாவை ஆறுதல்படுத்தும். ஆன்மிகப் பரவசம் எனும் அமைதியில் நம்மை ஆழ்த்தும். இறைவனையும் மனிதனையும் ஓர் நேர்கோட்டில் வந்து நிறுத்தும். அப்போது இறைவன் மனிதனின் பார்வையாக, கையாக, காலாக மாறுவான். ஆனால், இந்த ஆன்மிக நெறியின் தனித்தன்மை என்னவென்றால் அப்பொழுதும் இறைவன் இறைவனாகவும் மனிதன் மனிதனாகவுமே நிலைபெறுவோம். இஸ்லாம் ஓர் சித்தாந்தம். அது கொள்கையை மட்டும் பேசும் நடைமுறை அற்ற சித்தாந்தம் அல்ல. வரலாற்றில் பலமுறை தன் தூயவடிவிலும், சிலபோது குறைவடிவிலும் என நடைமுறை யதார்த்தமாக வழிகாட்டி பெரும் நாகரிகங்களையும் மக்கள் தொகுப்பையும் வழி நடத்தியுள்ளது. அதேபோல் அது வாழ்கையை சில துறைகளுக்குள் மட்டும் சுருக்கிப்பார்க்கும் குறைக்கண் சித்தாந்தமும் அல்ல. இறைவன் முழுமையானவன்; அவன் வழங்கிய இஸ்லாமும் முழுமையானது. தனி மனித, குடும்ப, சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் என என்னென்னே வழிகட்டுதல் வேண்டுமோ அதை நம்மால் இதில் பெற்றுக்கொள்ள முடியும்.
முஹம்மது நபியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் கேள்விக்கு அவர் இறைவனின் தூதர் என்பதை விடவும் பொருத்தமான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது. ஆனால், அந்தத் தூதர் எனும் பரிமாணம் புரட்சிகரத் தன்மையை உள்ளடக்கி இருந்தது. அவர் ஓர் மதப் புரட்சியாளர். கல்லையும் மண்ணையும் கடவுளாக்கும் மடைமைத் தனத்தை தடுத்து நிறுத்தினார். மத அதிகார வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்டார். இறைவனை நேரடியாகவே அழைக்கலாம்; இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறு ஒரு நபரின் உதவி தேவை இல்லை என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக தான் கடவுள் கிடையாது; தன்னை வணங்கக் கூடாது எனத் தடை போட்டார். தனக்குச் சுயமாக அற்புத சக்திகள் ஏதும் கிடையாது என்றும் அறிவித்தார். அவர் ஓர் சமூகப் புரட்சியாளர் கறுப்பர்களையும் வெள்ளையர்களையும் சகோதர்களாக மாற்றினார். இன, மொழி, நிற அடிப்படையில் எவ்வித உயர்வும்-தாழ்வும் கிடையது என்றார். அவமானமாகக் கருதி உயிரோடு புதைக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண் குழந்தையை தலையில் சுமந்தார். அவர் ஓர் அரசியல் புரட்சியாளர். அதிகாரம் அனைத்தும் இறைவனுக்கே, அது மன்னர்களுக்கோ, சர்வாதிகாரர்களுக்கோ, குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ கிடையாது என்றார். அவரைப் பற்றிக் கூற இன்னும் நிறைய உண்டு. 1400 ஆண்டுகள் கடந்த பின்னும் உலகளவில் நேசிக்கப்படும் தலைவர். அவரின் தலை முடியின் அளவிலிருந்து உண்டது, உடுத்தியது, நடந்தது, பேசியது என அனைத்தும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு பின்பற்றவும் படுகிறது. முஹம்மது நபி எனும் இந்த மாபெரும் இறைவனின் தூதரை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது?